புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றில் அம்மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் இருந்து 4 முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்தபோது, தி.மு.க எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றிருந்தது. இதைப்போன்று 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோதும், திராவிட முன்னேற்றக்கழகம் 7 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றிருந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோதும், 2016ஆம் ஆண்டும் தி.மு.க., 3 இடங்களில் மட்டும் வென்றிருந்ததால் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்திருந்தது.
இந்நிலையில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக்கழகம் 13 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதில், உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க மாநில பொருளாளர் அனிபால் கென்னடி, அ.தி.மு.க மாநிலச் செயலாளரும், 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்தவருமான அன்பழகனை வென்று அமோக வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்துள்ளார்.
வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்ட தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர்.சிவா, காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜீம் ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
இதுதவிர மூன்று புதுமுகங்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். பாகூர் தொகுதியில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.ராமநாதனின் மகன் ஆர்.செந்தில்குமார் , முதலியார்பேட்டைத் தொகுதியில் வழக்கறிஞர் சம்பத், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் நாக.தியாகராஜன் ஆகியோர் தி.மு.க.,வின் புதுமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் (10)- பா.ஜ.க (6) கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளன நிலையில், 6 இடங்களை வென்ற திராவிட முன்னேற்றக்கழகம் 15 ஆண்டுகளுக்குப்பிறகு பிரதான எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. இது தி.மு.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.