தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 165 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க 70 இடங்களில் முன்னிலையில் வருகிறது. இதனடிப்படையில் பார்த்தால் தி.மு.க ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதவில், " தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை பதிவு செய்தற்காக மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள், தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், சிறந்த முறையில் அவர் ஆட்சி செய்ய வேண்டும்" என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தகுதியான வெற்றி என்றும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற தனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஸ்டாலின் மற்றும் உடன் சார்ந்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாநில உரிமை, மொழிப்பற்று என கருணாநிதி செதுக்கிய பாதையில் நீங்கள் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாநில உரிமைகளை காத்திருக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில தன்னாட்சி அதிகாரம் தொடர்பான விவகாரங்களுக்கு தொடர்ந்து முக்கியத்தும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தி.மு.க தலைவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அததேபோல், அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் ஷேமந்த் சோரன் என பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.