6 மணி நேரத்தில் ஒரு மருத்துவர் 60 முதல் 80 நோயாளிகள் வரை சிகிச்சை அளிக்க நேரிடுவதால் சோர்வுக்குள்ளாகும் நிலை ஏற்படுவதால் அதிக மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழக அரசின் மினி கிளினிக்குகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவர்களுக்கு இன்னமும் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து "டி.டி.நெக்ஸ்ட்" ஆங்கில நாளேட்டின் நேற்றைய (26.04.2021) இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
கொரோனா நோய்த் தொற்று சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களுடைய 6 மணிநேரப் பணிக்காலத்தில் 60 முதல் 80 நோயாளிகளுக்கு வரை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமையின் காரணமாக மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.
எனவே உடனடியாக கூடுதல் மருத்துவர்களையும், சுகாதாரப் பணியாளர்களையும் பணியமர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் கொரோனா நோயை எதிர்த்து போராடுவதற்காக ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் உடனடியாக புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 4,368 படுக்கைகள் உள்ளன. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்ந்து 2,377 படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகள் அனைத்திலும் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் சேர்க்கப் பட்டுள்ளனர். இது தவிர 1,057 நோயாளிகள் சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 924 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.
பெரும்பாலான அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். ஏற்கனவே முக்கிய மூன்று மருத்துவமனைகளும் நிரம்பியுள்ள நிலையில் விரைவில் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்க்க இயலாத நிலைமை ஏற்படும். தனியார் மருத்துவமனைகளும் ஏற்கனவே இதில் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்த நோய்த்தொற்றின் போது ஏற்படக்கூடிய மனநலப் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் மருத்துவச் சிகிச்சைகள் தேவையாக உள்ளன. ஆனால் அது அவர்களுக்கு போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை என்று ஏராளமான இளம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் இப்பணிகளுக்குத் தேவைப்படுவதோடு ஓராண்டுக்கு மேலாக அந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2 வாரம் தொடர்ந்து பணியாற்றிய பின்னரும் ஒரு வாரத்திற்கு கூட தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தக் கடுமையான பணியின் காரணமாக மருத்துவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்று ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 235 கட்டாயத் தங்கிப் பணியாற்றும் இன்டர்ஷிப் பணியாளர்களும் உள்ளனர். மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு ‘கொரோனா சிகிச்சை முறைகள் நம் மாநிலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதை எங்களால் கையாள முடியும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழக அரசு தொடங்கியுள்ள மினி கிளினிக்குகளுக்கு தற்காலிகமாக சென்னை மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு இன்னமும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட பிப்ரவரி மாதத்தில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் நியமனம் செய்யப்பட்டதிலிருந்து சம்பளம் வாங்காமலேயே பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் 198 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. அவற்றுக்கு மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினசரி ரூ.2,000 சம்பளம் வழங்க மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி அந்த மினி கிளினிக்குகளை மூடிவிட்டு அதற்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்களை தனிப்பிரிவு மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க முடிவு செய்ததாகவும், பிரிவுகள் தோறும் காய்ச்சலுக்கான கிளினிக்குகள் திறக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கொரோனா சிகிச்சைக்கான மருத்துவர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்து ஆட்சிக்கு வருபவர்களே இதுபற்றி முடிவெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்தது. அவர்கள் தனிப்பிரிவு மருத்துவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
அதே முறை இப்போதும் பின்பற்றப்படக்கூடும் என்று கருதப்படுகிறது. சம்பள பாக்கி பற்றி கேட்டபோது, அது பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் புள்ளி விவரப்படி, சனிக்கிழமை அன்று 20,012க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000 என்ற இலக்கு முதன் முறையாகத் தாண்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இவ்வாறு "டி.டி.நெக்ஸ்ட்" சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது