தமிழ்நாடு

“சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்போம்”- மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்!

பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

“சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்போம்”- மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க அல்லாத கட்சிகளின் முன்னணித் தலைவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மின்னஞ்சல் வாயிலாக கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தில்,

“புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்; ஏன்?

பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆளுகின்ற மத்திய அரசு, புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு அதை எதிர்க்கின்றது. அதற்கான காரணங்களை தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.

1. இந்திய விடுதலையின்போது, கல்வி என்பது மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருந்தது. ஆனால், நெருக்கடி நிலையின்போது, காங்கிரஸ் அரசு, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அப்போது, தமிழ்நாடு தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தி வந்தது. பிரதமர் இந்திரா காந்தியின் முடிவை, காங்கிரஸ் முதல்வர்கள் எதிர்க்கவில்லை. எனவே, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு, மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துக் கொண்டனர்.

2. அதன்பிறகு அமைந்த நடுவண் அரசுகளும், கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வந்தன. மாநில மொழிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, இந்தி மொழியை முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதனால், காலப்போக்கில் மாநில மொழிகள் படிப்படியாக அழிந்து விடும். பல ஆயிரம் ஆண்டுகளாக மாநில மக்கள் கடைப்பிடித்து வருகின்ற பண்பாடு, பழக்கவழக்கங்களை, இந்தி மொழித் திணிப்பு அழித்துவிடும்.

எனவேதான், தமிழ்நாட்டு மக்கள் இந்தியை எதிர்த்து 1937 ஆம் ஆண்டு முதன்முதலில் அறப்போர் நடத்தினர். அதன்பிறகு, பல்வேறு காலகட்டங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ‘இனி இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி’ என்று, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் புரட்சி வெடித்தது. கர்நாடகம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது.

அதன் விளைவாக, “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகின்ற வரையிலும், ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக நீடிக்கும்” என, பண்டித ஜவகர்லால் நேரு அறிவித்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, 1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள், “தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை....தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டும்தான் ஆட்சி மொழிகள்” என அறிவித்தார்கள்.

அதன்படி, இன்றுவரை தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை. அதன் விளைவாக, தமிழக மாணவர்கள் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்று, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சாதனை நிகழ்த்தி வருகின்றனர்.

3. உலகம் முழுமையும் இந்தியைப் பரப்புவதற்காக, இந்திய அரசு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவிட்டு வருகின்றது. ஆனால், மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது இல்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் இந்தி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார்கள். தமிழுக்கு இடம் இல்லை.

4. இதுவரை இந்தியைப் பரப்பியது போதாது என்று, புதிய கல்விக்கொள்கையின் வழியாக, சமற்கிருத மொழியைக் கொண்டு வந்து திணிக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா கட்சி அரசு தொடங்கி இருக்கின்றது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, இந்தியாவில் சமற்கிருதம் பேசுகின்றவர்கள் வெறும் 24,000 பேர்தான். பேச்சுவழக்கில் இல்லாத, இறந்து போன ஒரு மொழியின் வளர்ச்சிக்காக, பல நூறு கோடி ரூபாய்கள் செலவில், பல பல்கலைக்கழகங்களைத் தோற்றுவித்து இருக்கின்றார்கள். அதேவேளையில், பல கோடி மக்கள் பேசுகின்ற பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, மைதிலி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளின் வளர்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கவில்லை; நடுவண் பல்கலைக்கழகங்களையும் தொடங்கவில்லை.

5. இன்றைய நிலையில், கூகுள், பேஸ்புக் போன்ற வலைதளங்கள், ஒரு மொழியில் எழுதுகின்ற கருத்துகளை, உலகின் 200 க்கும் மேற்பட்ட மொழிகளில், சில நொடிகளில் மொழிபெயர்த்துத் தருகின்றன. அதேபோல, ஒருவர் பேசுவதையும், பல மொழிகளில் பெயர்த்துச் சொல்கின்றது. உள்ளங்கை அளவிலான சிறிய மொழிபெயர்ப்புக் கருவிகளின் துணையோடு, தமிழ்நாட்டு வணிகர்கள் சீனாவுக்குச் சென்று வணிகம் செய்து வருகின்றனர்.

எனவே, இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒருவர், தன் தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் படிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இந்தி, சமற்கிருத மொழிகளைப் படிக்க வேண்டிய தேவையும் அறவே இல்லை.

6. ஆங்கிலம் அயல்நாட்டு மொழி; அதைக் கற்க மாட்டோம் என்று இந்தி பேசும் மாநிலத்தவர்கள் சொன்னால், மாநில மொழிகளைப் பேசுகின்ற மக்களுக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான்.

7. தமிழ்நாடு மாநிலம், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகவே, இந்தியாவில் ஒரு மாற்றுக் கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி கண்டு இருக்கின்றது. அதன் விளைவாக, இன்று இந்தியாவில் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கின்றது. பல நூற்றாண்டுகளாக, சமூகத்தில் நிலவி வருகின்ற பாகுபாடுகளைக் களைந்து இருக்கின்றது. சமத்துவத்தை நிலைநாட்டி வருகின்றது.

8. இந்தியாவில் பள்ளிகளில் முதன்முதலாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியது. இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஏழு கிலோ மீட்டருக்கு ஒரு மேனிலைப்பள்ளியை அமைத்தது தமிழ்நாடு. அதேபோல, மாநில அரசு நடத்தி வருகின்ற கல்லூரிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகம்.

“சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்போம்”- மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்!

9. அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குத் தாய்மொழிக் கல்வி வழங்கப்படுகின்றது. தமிழ் மொழியில் பயில்வோருக்கு, தேர்வுக் கட்டணம் உட்பட எந்தக் கட்டணமும் கிடையாது. மாறாக, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இட ஒதுக்கீட்டுக் கொள்கை முழுமையாகப் பின்பற்றப்படுகின்றது. பெண் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கின்றது. இன்று, ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.

10. புதிய கல்விக்கொள்கை, கல்வியை முழுக்க முழுக்க மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கின்றது. கூட்டு ஆட்சித் தத்துவத்தையும், அதிகாரப் பரவலையும் மறுக்கின்றது. மாநில அரசுகளிடம் இருந்து கல்வியை, முற்றுமுழுதாகப் பறித்துக் கொள்வதே, இக்கொள்கையின் நோக்கம் ஆகும். மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குழந்தைகள் சிந்திக்கும் உரிமையை முடக்கி விடுகின்றது.

11. இன்று இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த ஆண்டில் மட்டும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

ஆனால், மருத்துவக் கல்வியில் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கின்ற வகையில், நடுவண் அரசு, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதனால், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவக் கல்வியில் சேருவதற்குப் பெருந்தடையை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேனிலைக் கல்வி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பு எண்களின் அடிப்படையில்தான் அனைத்து உயர் கல்வியிலும் சேர்க்கை நடைபெற வேண்டும். மாறாக, அதற்கு ஒரு தனித்தேர்வு என்பது, தகுதி, திறமை என்று கூறி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கல்வி உரிமையை, முற்று முழுதாகப் பறித்து விடும். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் என்ற பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை நடைபெறுகின்றது. ஏழைகளுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனியாக ஆகி விடும்.

12. உலகில் எத்தனை நாடுகளில் மும்மொழிக் கொள்கை இருக்கின்றது? எங்கேயும் கிடையாது. அமெரிக்கர்கள், பிரெஞ்சு மொழியைப் பேச மாட்டார்கள். பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலம் பேசுவதையோ, கற்பதையோ அறவே விரும்புவது இல்லை.

13. சீனர்களும், ஜப்பானியர்களும் தங்கள் தாய்மொழியைத் தவிர, ஆங்கிலம் கூடக் கற்பது இல்லை. ஆனால், அந்த நாடுகள் இன்று உலக அளவில் வியத்தகு அறிவியல் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

14. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க, புதிய கல்விக் கொள்கையின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல, இந்தி பேசுகின்ற மாநிலங்களில், பெங்காலி, மராட்டி உள்ளிட்ட பிற மாநில மொழிகள் கற்பிக்க நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றதா? இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க மோசடியான திட்டம்.

15. அனைவருக்கும் தாய்மொழிக் கொள்கை என்று பேசுகின்றார்களே தவிர, உண்மையில், இந்தியைத் திணிக்கவும், அதற்கும் மேலாக இப்போது சமற்கிருதத்தைத் திணிக்கவும்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

16. 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மண்பாண்டம் செய்தல், மின்சார வேலைகள் உள்ளிட்ட ஒரு தொழிலை, அந்தத் தொழில் நடக்கின்ற இடங்களுக்கு சென்று பத்து நாட்கள் பயிற்சி பெற வேண்டும் என்பது, குலக்கல்வித் திட்டமே ஆகும்.

17. தற்போது நடைமுறையில் இருக்கின்ற 10+2 என்ற அமைப்பைச் சிதைத்து, 5,3,3,4 என்ற புதிய கல்வி அமைப்பைக் கொண்டு வருகின்றார்கள். அதனால், மாணவர்கள் இடைநிற்றல்தான் கூடுமே தவிர, கல்வியின் தரம் உயராது. இதுகுறித்து, மாநில அரசுகளிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை.

18. மாநில அரசுகளிடம் இருக்கின்ற கல்வியை, முற்று முழுதாகத் தனியார்மயம் ஆக்குகின்ற வகையில்தான் புதிய கல்விக்கொள்கை இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகள் தாங்கள் ஈட்டுகின்ற இலாபத்தை, முதலீடாக மாற்ற வகை செய்கின்றது. கல்விக் கொள்ளை நடைபெற வழி வகுக்கின்றது.

19. 15 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்து இருந்தாலும், அது உயர்கல்விக்கான தகுதி இல்லை என புதிய கல்விக்கொள்கை சொல்லுகின்றது. அதன்பிறகு, இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் பெறுகின்ற மதிப்பு எண்களை வைத்துத்தான் கல்லூரியில் சேர்ப்பார்களாம். இது உயர்கல்விக்கு வழி வகுக்கின்றதா? அல்லது இலட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பெறுவதைத் தடுத்து, அவர்களைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றுகின்ற முயற்சியா?

எனவே, இந்தி, சமற்கிருத மொழிகளைத் திணித்து, மாநில மொழிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டவும், சாதி மதப் பாகுபாடுகளை நிலைநிறுத்தி, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும் திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகின்ற, ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் குழுக்கள் இயக்கி வருகின்ற, பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, தாங்கள் விரிவாக ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில், எதிர்ப்புக் கருத்தை வெளிப்படுத்துமாறு, அன்புடன் வேண்டுகின்றேன்.” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories