தமிழ்நாடு

பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்துவிழுந்து பலி... ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு!

பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்து பலியானவரின் குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்துவிழுந்து பலி... ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்துவிழுந்து கட்டிட தொழிலாளி அசோக்குமார் பலியானதற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி மனைவி சரஸ்வதி வழக்குத் தொடர்ந்த நிலையில், பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்து பலியானவரின் குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இரவில் மழை பெய்துகொண்டிருந்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற அசோக்குமார் என்பவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் அவர் பலியானார்.

நகராட்சி நிர்வாகம் கழிப்பறையை முறையாக பராமரிக்காததே கணவரின் மரணத்திற்கு காரணம் என்றும், கொத்தனார் வேலை செய்து வந்த அவரின் மரணத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி அவரது மனைவி சரஸ்வதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மற்றும் பல்லடம் நகராட்சி தரப்பில், கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக இருப்பதாக அதை ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கை அளித்து இருப்பதால், மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு நகராட்சி பொறுப்பாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கட்டிடத் தொழிலாளி அசோக்குமாரின் மரணத்திற்கு நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்பதை சுட்டிக்காட்டி, அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி 27 லட்ச ரூபாய் இழப்பீட்டை நிர்ணயித்த நீதிபதிகள், அதில் 10 லட்ச ரூபாயை மனைவி சரஸ்வதிக்கும், தலா 5 லட்ச ரூபாயை இரு மகள்கள் மற்றும் மகனுக்கும், 2 லட்ச ரூபாயை அசோக்குமாரின் தாயாருக்கும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டுமென பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை ஜூன் 21-ஆம் தேதி தாக்கல் செய்யவும் அரசு உத்தரவிட்டு உள்ளனர்.

உலகில் மழையின்றி உயிர் வாழ முடியாது என்றாலும், விலைமதிப்பில்லாத ஒரு உயிர் மழையால் பறிபோயுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories