தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலால் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 8,449 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,71,384 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 95,561 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,06,40,110 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 2,636 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,77,300 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 795 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 583 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று நூற்றுக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 4,920 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,96,759 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 61,593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,032 ஆக அதிகரித்துள்ளது.