சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரது 24 வயது பட்டதாரி மகள் பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலிஸார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில், வீட்டிலிருந்து கடிதம் ஒன்றைக் கைப்பற்றினர். அதில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலக்ஷ்மிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது.
மேலும் அந்த கடிதத்தில், பவித்ராவின் தந்தை மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு கல்லீரல் பழுதாகி விட்டதாகவும், மேலும் அவருக்கு இருதயத்தில் துளை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆகையால் எனது தந்தையை காப்பாற்றுவதற்கு தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது உயிர் பிறந்த பிறகு தனது இதயத்தையும் கல்லீரலையும் தந்தைக்கு கொடுக்கும்படி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.
பவித்ரா பட்டம் படித்து வீட்டில் இருந்துள்ளார். தந்தை மருத்துவமனையில் இருப்பதனால் தாயார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு 50 வயது உடைய தனது தோழியின் தந்தை சேகர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அவரை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்குச் சென்று தற்போது பவித்ரா ஜாமீனில் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் உயிரைக் காப்பாற்ற மகள் பவித்ரா தற்கொலை செய்த சம்பவம் நெகிழ்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.