தமிழ்நாடு

“அரசு வேலை பெற லஞ்சம்” - இளம்பெண்ணிடம் ரூ. 8 லட்சம் மோசடி.. அ.தி.மு.க அமைச்சரின் உதவியாளர் மீது புகார்!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக அமைச்சர் நிலோபர் கபீலின் உதவியாளர் மீது இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

“அரசு வேலை பெற லஞ்சம்” - இளம்பெண்ணிடம் ரூ. 8 லட்சம் மோசடி.. அ.தி.மு.க அமைச்சரின் உதவியாளர் மீது புகார்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தின் பல பகுதிகளும், அ.தி.மு.க-வினர் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இளைஞர்களிடமிருந்து பணம் பறித்ததாக அவ்வப்போது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆட்சி முடிவடையும் நேரத்தில், அ.தி.மு.கவினரின் இத்தகைய மோசடி வேலைகள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக அமைச்சர் நிலோபர் கபீலின் உதவியாளர் மீது இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா (30). முதுகலை பட்டதாரியான இவர், நேற்று தனது கைக்குழந்தையுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “வாணியம்பாடி வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த நான் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தேன். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீலின் தனி உதவியாளரான பிரகாசம் என்பவர் எனக்கு அறிமுகமானார். தொழிலாளர் நலத்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அமைச்சர் நிலோஃபர் கபீலிடம் கூறி அந்த வேலையை எனக்கு வாங்கித் தருவதாகக் கூறினார்.

இதற்காக. ரூ.15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். அதன்பேரில், நான் எனது தங்க நகைகளை அடகு வைத்தும், பல இடங்களில் கடன் வாங்கியும் கடந்த 2017-ம் ஆண்டு ஒரே கட்டமாக ரூ.15 லட்சத்தை பிரகாசத்திடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்ட அவர் 2 ஆண்டுகளாகியும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து பலமுறை அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதும், முயற்சித்து வருவதாகவே கூறிவந்தார்.

அமைச்சர் நிலோஃபர் கபீலை நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கேட்டபோது கூட அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நான் வாங்கிய கடன் தொகைக்கு என்னால் வட்டி செலுத்த முடியவில்லை, அடகு வைத்த தங்க நகைகளும் மூழ்கும் நிலைக்குச் சென்றதால், நான் கொடுத்த பணத்தை பிரகாசத்திடம் திருப்பிக்கேட்டேன். ஆனால், அவர் தர மறுத்தார். இது குறித்து கடந்த 2019-ம் ஆண்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

இதையறிந்த பிரகாசம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்தார். பாக்கி ரூ.8 லட்சம் பணத்தை தரவில்லை. ஓராண்டு கழித்து தருவதாக கூறினார். 2020-ம் ஆண்டு பாக்கி பணத்தை கேட்டபோது, அவர் 2 காசோலைகளை கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது.

இதுகுறித்து அவரிடம் தெரிவித்தபோது, ரூ.8 லட்சம் பணத்தை தர முடியாது எனக்கூறி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இதேபோல சமீபத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு அமைச்சர் நிலோஃபர் கபீலிடம் சிபாரிசு செய்து அரசு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி அ.தி.மு.க நகரச் செயலாளர்கள் இருவர் ரூ. 8 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories