தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க அரசு, சொல்லிக் கொள்ளும்படி எந்தவொரு நன்மையும் செய்யாததால், அ.தி.மு.கவினர் தேர்தல் பிரச்சாரங்களில் பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
மேலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாலவாக்கம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 அ.தி.மு.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாலவாக்கம் அடுத்த சித்தனக்காவூரில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளிக்க கூறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை குழுவினர் சித்தனக்காவூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சித்தனக்காவூர் அ.தி.முக., பிரமுகர் வேங்கப்பன் என்பவரிடமிருந்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த 20,000 ரூபாயை பறிமுதல் செய்து, அவரை சாலவாக்கம் போலிஸிடம் ஒப்படைந்தனர்.
இதனையடுத்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஒரகடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அ.தி.மு.க உறுப்பினர் ராமதாஸ், அ.தி.மு.க கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என கூறி பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்துகொண்டிருந்தார், இது தொடர்பாக எழுந்த புகாரில் ராமதாசை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.