தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க அரசு, சொல்லிக் கொள்ளும்படி எந்தவொரு நன்மையும் செய்யாததால், அ.தி.மு.கவினர் தேர்தல் பிரச்சாரங்களில் பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
மேலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் பற்றி அவதூறுகளை அள்ளிவீசும் நடவடிக்கையில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்துவதும், மிரட்டுவதும் போன்ற அடாவடி நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தி.மு.க பிரச்சாரத்தின் போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பேச கூடாது என அடிதடியில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேருக்கு போலிஸ் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தி.மு.க சார்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த திங்களன்ற பொள்ளாச்சி அடுத்த ஓக்கிலிபாளைத்தில் இரவு நடந்த தி.மு.க பிரச்சார கூட்டத்தில், தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்துவரும் பெண் விடுதலை கட்சி சபரிமாலா, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்துப் பேசியதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன், நாமகிரிராஜ், நாகமணிக்கம், ஜெகதீசன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பிரச்சாரத்தின் போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பேச கூடாது என அடிதடியில் ஈடுபட்டு, மணிகண்டன் என்பவரை சாதியின் பெயரை சொல்லி திட்டியதாகவும், சபரிமாலாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இதுதொடர்பாக தி.மு.கவினர் புகார் அளித்தனர். பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்வதாக பிரவீன் மிரட்டியதாக பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல், தகாத வார்த்தையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 8 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலிஸார் தீவிராம தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.