தமிழ்நாடு

“முழு உரையும் பரிசீலிக்கப்பட்டால், எனக்கு ஏற்பட்ட அவமானம் அழியும்” - தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராசா பதில்!

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., தேர்தல் ஆணையத்திற்கு இன்று இடைக்கால பதில் அளித்தார்.

“முழு உரையும் பரிசீலிக்கப்பட்டால், எனக்கு ஏற்பட்ட அவமானம் அழியும்” - தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராசா பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் - முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை ஒப்பிட்டு தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசியதை வெட்டி - ஒட்டி சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையை ஏற்படுத்த முயன்றனர்.

ஆ.ராசா பேசியதை உள்நோக்கத்துடன் தவறாகத் திரித்து தேர்தல் பரப்புரையின்போது பேசி வந்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஆ.ராசா பேசியது குறித்து அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனம் பற்றி மார்ச் 31 மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்கும்படி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., தேர்தல் ஆணையத்திடம் இன்று விளக்கமளித்தார்.

ஆ.ராசா எம்.பி., அளித்துள்ள விளக்கக் கடிதம் வருமாறு :

1. முதல்வர் குறித்து அவதூறாகவோ அல்லது தரமற்ற முறையிலோ நான் பேசவில்லை. மேலும், பெண்கள் மற்றும் தாய்மை குறித்து அவதூறாகவோ இழிவுபடுத்தும் விதத்திலோ நான் பேசவில்லை.

2. அம்பேத்கர், பெரியார், அண்ணாவின் மாணவனான, கலைஞரால் வழிநடத்தப்பட்ட, தி.மு.க உறுப்பினரான நான், பெண்களை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை, ஈடுபடப் போவதுமில்லை. பெண்களை அதிகாரப்படுத்துவதும், சமூகத்தில் அவர்களுக்குச் சம உரிமைகளைப் பெற்றுத் தருவதும்தான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. அப்படிப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், பெண்கள் மற்றும் தாய்மைக்கு அவமதிப்பைக் கொண்டு வருவதைக் கனவு கூட காண முடியாது.

3. என்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு முன் சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

* முதல்வரை நான் அவமதித்ததாக, அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தவறாகப் பிரச்சாரம் செய்தபோது, மார்ச் 27 அன்று, பெரம்பலூரில் ஊடகங்களைச் சந்தித்து, விளக்கமளித்தேன். இதன் மூலம் முதல்வர் எனது பேச்சை சரியான விதத்தில் புரிந்துகொண்டிருப்பார், இவ்விவகாரம் முற்றுப்பெற்றுவிடும் எனக் கருதினேன்.

* என் விளக்கத்தையும் தாண்டி, மார்ச் 28 அன்று சென்னை, திருவொற்றியூரில் முதல்வர் எனது பேச்சை மாறுபட்ட விதத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

* அண்ணாவின் மூன்று விதிமுறைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் தி.மு.கவினர் நடந்துகொள்ள வேண்டும் என, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.

* முதல்வரின் உணர்ச்சிவயப்பட்ட பேச்சையடுத்து, மார்ச் 29 அன்று ஊட்டியில் நான் ஊடகச் சந்திப்பில் முதல்வருக்கு மன்னிப்பு தெரிவித்தேன். அவை தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

* இத்துடன் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என நம்புகிறேன்.

கழக துணை பொதுச்செயலாளர் திரு. ஆ.இராசா MP அவர்கள், தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள விளக்கம்:

Posted by DMK - Dravida Munnetra Kazhagam on Wednesday, 31 March 2021

இந்த விவகாரத்தில் என்னுடைய இடைக்கால பதில்:

1. நடத்தை விதிகளை மீறும் எந்தவொரு விஷயத்தையும், தரக்குறைவாகவோ, பெண்களின் தாய்மையின் கவுரவத்தைக் குறைக்கும் விதத்திலோ நான் பேசவில்லை.

2. இந்திய தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.கவால் வழங்கப்பட்ட 27/03/2021 தேதியிட்ட புகாரின் நகல் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, அப்புகாரில் எனக்கு எதிராக என்ன கூறப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. எனவே, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. நான் விளக்கமான பதிலை அளிக்க புகாரின் நகலை வழங்குமாறு ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

3. உங்கள் நோட்டீஸின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு, குற்றவியல் எண் 89/2021இல் அவதூறான பேச்சு, 1951ஆம் ஆண்டு பிரதிநிதித்துவ மக்கள் சட்டம் 153, 294 (பி) ஐபிசி மற்றும் 127 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முழுமையான மற்றும் பக்கச் சார்பற்ற விசாரணை உண்மையை வெளிக்கொணரும், மேலும் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக நான் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டேன் என்பதை நிரூபிக்கும். மேலும், தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிந்துரையும் தற்போதைய விசாரணையில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.

4. எனது முழு உரையையும் பரிசீலிக்குமாறு நான் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் எனது பேச்சு மாறுபட்ட விதத்தில் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய முடியும்.

5. தமிழில் உவமானம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலில் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை ஒப்பிடும் வகையில், பொதுமக்களுக்கு புரிந்துகொள்ளும் விதத்தில் குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசினேன். மு.க.ஸ்டாலின் தலைவராக உருவாக எந்தவொரு உழைப்பையும் செலுத்தவில்லை என்ற முதல்வரின் தொடர் குற்றச்சாட்டுக்கான பதிலே என்னுடைய ஒப்பீடு. முழு உரையும் பரிசீலிக்கப்பட்டால், அது எனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட காயத்தையும் அழிக்கும் என்று நம்புகிறேன்.

தேர்தல் ஆணையம் எனக்கு கீழ்க்கண்ட மூன்றையும் வழங்கவேண்டும்.

1. நான் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டப்படும் முழு உரையின் நகல்.

2. அ.தி.மு.க தேர்தல் ஆணையத்தில் மார்ச் 27 அன்று அளித்த புகார் நகல்.

3. விரிவான பதிலை அளிக்க எனது வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்த வாய்ப்பு.

இவ்வாறு ஆ.ராசா எம்.பி., தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories