கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது சென்னையில் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2.80 கோடிக்கும் மேலான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஒவ்வொரு நாளும் புதிதாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவை சாலைகளில் இயங்குவதால் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. மற்ற இடங்களை விட சென்னையில் அதிக வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதால், காற்று மாசுபாடு இங்கு கூடுதலாக ஏற்படுகிறது. இதே போல் இங்கு தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கிறது.
இதுவும் காற்று மாசு பாட்டுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச்சில் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் முதல் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் இயங்காததால், அதிலிருந்து நச்சு கலந்த புகை வெளியேறுவதும் குறைந்தது.
மேலும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதனால் இங்கிருந்தும் நச்சுக்காற்று வெளியேறவில்லை. எனவே, ஊரடங்கு காலத்தில் சென்னையில் காற்று மாசுபாடு பெருமளவில் குறைந்திருந்தது. பிறகு கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தில் செயல்பட துவங்கியது.
மேலும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் உள்ளிட்டவையும் இயங்குகிறது. இதனால் ஊரடங்கு நேரத்தில் குறைந்திருந்த காற்று மாசுபாடு, தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. படிப்படியாக அதிகரித்து வந்த காற்று மாசுபாடு, தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது காற்று மாசுபாடு பெருமளவில் உயர்ந்திருப்பது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, நாடு முழுவதும் காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் முக்கிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது. அவை ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆகும். தற்போது புதிதாக பெருங்குடி, ராயபுரம், கொடுங்கையூர், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிப்படுகிறது.
இங்கு, காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டதில், தளர்வு வழங்கப்பட்ட பிறகு காற்று மாசுபாடு படிப்படியாக அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது ஆலந்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தரம் குறித்த ஆய்வில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி 2.5 மைக்ரான் அளவு 15.7 ஆக இருந்தது. இது தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த 25ம் தேதி நிலவரப்படி 2.5 மைக்ரான் அளவு 52.77 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.