“அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்குத் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த வசதி செய்து தரப்படும்” என தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.
ஏழை மாணவியருக்குப் பெரும்பயனளிக்கும் தி.மு.க-வின் இந்த வாக்குறுதியை பொதுமக்கள் பரவலாக வரவேற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் பிரசார மேடையில் ஒருவர் கடுமையாக விமர்சித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவியர் சானிட்டரி நாப்கின்களைப் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் தற்போது வரை பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், “வீட்டில் இருக்கும் தன் பெண்களுக்கு ஒரு நாப்கின் கூட வாங்கித்தர முடியாத அளவுக்கு தமிழர்கள் என்ன துப்பற்றவர்களா?!” என்கிற ரீதியில் தமிழர் பெருமை பேசி தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிராகக் கொந்தளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சி நிர்வாகி.
மகளிர் தினத்தன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு 1 நிமிடம் அனுமதி அளிக்கப்பட்டபோது, முன்வைத்த கோரிக்கையின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு பெற்றுத் தந்தவர் தி.மு.க எம்.பி., திருச்சி சிவா.
கடந்த 2018ம் ஆண்டு மகளிர் தினத்தன்று பேசிய திருச்சி சிவா, “உண்மையிலேயே உலக மகளிர் தினத்தன்று மகளிருக்கு ஏதாவது பரிசு தர விரும்பினால், பெண்களின் அத்தியாவசிய பயன்பாட்டுப் பொருளான சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு தரவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
அதே ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பில் சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விலக்கு தரப்பட்டது. பெண்களுக்குப் பயனளிக்கும் இந்த வரிவிலக்கைப் பெற்றுத்தந்தது, இன்று அரசுப் பள்ளி கல்லூரி மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிற தி.மு.க தான்.