தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் கட்டுவதற்குக் கட்டட திட்ட அனுமதி பெற நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு அண்மையில் சென்றார்.
இந்த அனுமதி கொடுக்க மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் நாகேஸ்வரன் 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதைக் கொடுக்க விரும்பாத ஆனந்த் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவுக் காவல் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலிஸார், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு கடந்த மாதம் 25-ம் தேதி மாலை சென்று மறைந்திருந்து, ஆனந்திடமிருந்து ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகேஸ்வரனை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
மேலும், திருச்சி காட்டூர் விக்னேஷ் நகரிலுள்ள நாகேஸ்வரன் வீட்டிலும் திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலிஸார் சோதனை நடத்தியதில். 50 பவுன் நகை, 14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகேஸ்வரனை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்த நாகேஸ்வரனை, நேற்று தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பத்மாவதி, சசிகலா கொண்ட குழுவினர் அவருடைய வங்கி கணக்கு மற்றும் மனைவி ஜாஸ்மின் வங்கி கணக்குகள், லாக்கர்களை திறந்து சோதனை நடத்தினர்.
இதில் திருச்சி திருவானைக்காவலில் உள்ள வங்கி ஒன்றில் 1.90 கோடி ரொக்கமும், திருவெறும்பூரில் உள்ள வங்கி ஒன்றில் 37 லட்சம் ரொக்கமும் லாக்கரில் இருந்தது. மேலும் 173 பவுன் தங்க நகைகளும் லாக்கரில் இருந்தது.
மேலும், நாகேஸ்வரன் பெயரில் பத்து வங்கிகளில் 1.12 கோடி ரொக்கம் சேமிப்பு கையிருப்பாக இருந்தது. அதே போல் ரூ.23 லட்சத்துக்கு நிரந்தர வைப்பு தொகைக்கான ஆவணங்கள் இருந்தது.
இவற்றை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவருக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றனர்.