தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் தூய மிக்கேல் விசைப்படகு மற்றும் பருவலை தொழில் புரிவோர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த அந்தோணி மிக்கேல் ஹெமில்டன் என்பவருக்குச் சொந்தமான, அரசு வழங்கிய ஆழ்கடல் மீன்பிடி பதிவு எண் கொண்ட விசைப்படகு கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி 8 மீன்பிடி தொழிலாளர்களுடன் தருவைக்குளத்தில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக கன்னியாகுமரியின் தென்திசையில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது அதிவேக நீரோட்டத்தின் காரணமாக படகு திசைமாறி மாலத்தீவு எல்லை அருகே சென்று விட்டது. அப்போது அங்கே மாலத்தீவு ரோந்து படகில் வந்த அந்நாட்டு படையினர் தமிழக விசைப்படகை பறிமுதல் செய்து அதிலிருந்து எட்டு மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
அவர்களை குல்ஹுதுஃபுஷி பகுதியில் வைத்திருந்தனர். சென்ற மீனவர்கள் இன்னும் திரும்பவில்லையே என்று சில நாட்கள் காத்திருந்த அவரது உறவினர்களுக்கு ஒருவாரம் கழித்தே இத்தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் மீட்டுத் தருமாறு தருவைக்குளம் தூய மிக்கேல் விசைப் படகு மற்றும் பருவலை சங்கத்தினர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் மக்களவை தி.மு.க குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எம்.பியிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதையடுத்து கனிமொழி எம்.பி மத்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தமிழக மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி, அவர்கள் அதிவேக நீரோட்டத்தாலே அங்கே சென்றுவிட்டனர் என்பதையும் விவரித்து மீனவர்கள் மற்றும் விசைப்படகினை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து இதுகுறித்து வெளியுறவுத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார்.
கனிமொழி எம்.பி.யின் கோரிக்கையை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மாலத்தீவு அரசிடம் பேசினர். இதன் அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களும், விசைப்படகும் மார்ச் 9 ஆம் தேதி பகலில் மாலத்தீவில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மார்ச் 14 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனிமொழியின் நடவடிக்கைகளால் மீனவர்களும் அவர்களின் விசைப்படகும் காப்பாற்றப்பட்டதையடுத்து மீனவர்கள் கனிமொழி எம்.பிக்கு நன்றி தெரிவித்தார்கள்.