தமிழ்நாடு

“துணிவே நம் ஆயுதம்” - உயரதிகாரி மீது புகாரளித்த ஐ.பி.எஸ் அதிகாரியைக் கொண்டாடும் பெண்கள்!

அதிகார வர்க்கத்தால் தனக்கு ஏற்பட்ட இடர்களையெல்லாம் கடந்து அவர் உறுதியாக நின்றதுதான் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

“துணிவே நம் ஆயுதம்” - உயரதிகாரி மீது புகாரளித்த ஐ.பி.எஸ் அதிகாரியைக் கொண்டாடும் பெண்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், எல்லாத் துறைகளிலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிரான தடைகள் அப்படியேதான் இருக்கின்றன. எதற்கும் அஞ்சாமல் துணிந்து நிற்றலே முன்னேற்றத்திற்கான வழி.

தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தனது உயரதிகாரியான சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மீது புகார் அளித்தார் தமிழகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்.

துறையின் உயரதிகாரி மீது அஞ்சாமல் புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பெண்கள், பொதுமக்கள் என பலதரப்பினர் மத்தியிலும் வெகுவான வரவேற்பும், ஆதரவும் எழுந்துள்ளது.

புகார் அளிக்கச் செல்லும் வழியில், அதிகார வர்க்கத்தால் தனக்கு ஏற்பட்ட இடர்களையெல்லாம் கடந்து அவர் உறுதியாக நின்றதுதான் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

பல்வேறு துறைகளிலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேற்றப்படும் வேளையில், பலரும் தங்களது ஆண் உயரதிகாரிகள் மீது புகார் தெரிவிக்க அஞ்சி, அமைதியாக இருந்துவிடுகின்றனர். இது ஆண்களுக்குச் சாதகமாகி அவர்களின் கொடும் கைகள் இன்னும் நீள்வதற்கு வாய்ப்பாகி விடுகின்றன.

ஆனால், உயரதிகாரியால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு, தகுந்த தண்டனை பெற்றுத்தந்தே தீருவேன் என உறுதிபூண்டு அதிகாரத் திமிர் கொண்ட அதிகாரியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார் இந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி.

இவர்போன்ற அதிகாரிகளின் அச்சமற்ற நடவடிக்கைகளால் மட்டுமே, ஆணாதிக்கத் திமிரோடு எதையும் செய்யத் துணியும் உயரதிகாரிகளின் கொட்டம் அடங்கும்.

பாலியல் கொடுமை குறித்த புகார்களைத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிக்கும் சமூகத்தின் மனசாட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்த, பெண்கள் துணிவது அவசியம். அதற்கு அடையாளமாகத்தான் பெண்களால் கொண்டாடப்படுகிறார் துணிச்சலான அந்த ஐ.பி.எஸ் அதிகாரி.

banner

Related Stories

Related Stories