மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய மோடி அரசு அறிவித்த நாள் முதல் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு சிதைந்து, பலரும் வேதனையில் ஆழ்ந்து வருகின்றனர்.
12ம் வகுப்பில் தமிழ் வழியில் படித்திருந்தாலும் ஆங்கில வழியில் படித்திருந்தாலும் உரிய தகுதி இருந்தபோதும் பாடத்திட்டத்தில் இல்லாத நீட் நுழைவுத் தேர்வால் தங்களால் மருத்துவராக முடியாதோ என்ற தாழ்வு மனப்பான்மையை பா.ஜ.க அரசு உருவாக்கி வருகிறது.
அதற்கு முதல் பலியாக தனது உயிரையே நீத்தார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அவருக்குப் பிறகு பிரதீபா, ஸ்ருதி, ரிதுஸ்ரீ என 10க்கும் மேற்பட்ட அப்பாவி மாணவர்கள் நீட் தேர்வால் தத்தம் உயிர்களை மாய்த்திருக்கின்றனர்.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முழுவதுமாக விலக்களிக்க வேண்டும் என கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்திய அரியலூர் மாணவி அனிதாவின் 21வது பிறந்தநாள் இன்று.
பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிப்பதற்கான தகுதி இல்லை எனக் கூறி நீட் தேர்வை திணித்து அவரது உயிரை பறித்த மத்திய மாநில அரசுகளை மறக்க முடியுமா?
தலைவர் கலைஞர் இருந்த வரையிலும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரையிலும் தமிழகத்தில் நுழையாத நீட் நுழைவுத் தேர்வு எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடமானம் வைத்து வேடிக்கை பார்த்ததை தவிர வேறு என்ன செய்தது?
நீட் தேர்வாலும், அதை திணித்தவர்களாலும் அரசியல் கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நீட் இல்லா தமிழகம் அமைக்க வேண்டும் எனவும் பாசிச அடிமைகள் இல்லாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.