தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், மறைந்த ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் ஒட்டப்பட்ட பள்ளிப்பைகளையும், பென்சில்களையும் பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மறைந்த ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் ஒட்டப்பட்ட 10 ஆயிரம் புத்தகப்பைகள், கலர் பென்சில்கள் மற்ற பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக புத்தகப்பைகளை விநியோகம் செய்வதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்து, விநியோகம் செய்ய இருந்த, பள்ளி புத்தகப்பைகள் மற்றும் பென்சில்களை கைப்பற்றி, அதே பள்ளியின் வேறு அறையில், வைத்து சீல் வைத்தனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், தேர்தல் நடத்தை விதியை மீறி மறைந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் ஒட்டப்பட்ட பைகள், மற்றும் பென்சில்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதால், புத்தகப்பைகள், பென்சில்களை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.