திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பின்னலாடைகள் மற்றும் சாயப்பட்டறை தொழிற்சாலைகளின் கழிவுகளால் நொய்யல் நதி மாசடைந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாழடைந்தன.
இதுதொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு முதல் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆலை உரிமையாளர்கள் 25 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டுமென கடந்த 2003ம் ஆண்டு உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், 25 கோடி ரூபாய் உயர்நீதிமன்ற வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இதுதவிர, அபராதமாக வசூலிக்கப்பட்ட 42.02 கோடி ரூபாய், இழப்பீடாக வசூலிக்கப்பட்ட 7.64 கோடி ரூபாய் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வசம் இருத்தது. தமிழக அரசும் இழப்பீடாக 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து, விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட இத்தொகை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும், குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு மட்டுமே இழப்பீடு கிடைத்துள்ளதால், பாதிக்கப்பட்ட 29 ஆயிரத்து 956 விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் வகையில், உயர்நீதிமன்ற வங்கி கணக்கில் உள்ள 25 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு மாற்றம் செய்யக் கோரி கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செல்வகுமார் சார்பில் வழக்கறிஞர் கதிரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, உயர்நீதிமன்ற வங்கிக்கணக்கில் உள்ள 25 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு கோரியுள்ள அனைவரது மனுவையும் பரீசலித்து, தகுதியான நபர்களுக்கு மே மாதம் 31ம் தேதிக்குள் இழப்பீடு வழங்கி, அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
இந்த உத்தரவின் மூலம் சாயப்பட்டறை கழிவுகளால் மாசடைந்த நொய்யல் நதி ஒட்டிய திருப்பூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு பிரித்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.