திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி பள்ளி வளாகத்திலேயே இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில், சீனியர் மாணவர்கள் அடி வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, சீனியர் மாணவர்கள் அடி வாங்குவதை பார்த்த வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிரித்திருக்கின்றனர். அதனால், ஆத்திரமடைந்த ஒரு மாணவர், எதிரணியைச் சேர்ந்த ஜூனியர் மாணவர் ஒருவரை பள்ளி மைதானத்தில் உள்ள சுவர் ஓரமாக வைத்து சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் மீது சரமாரியாகக் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துகிறார் சீனியர் மாணவர். அப்போது அடி தாங்க முடியாமல் அந்த மாணவர் `எனக்கு தெரியாதுண்ணா, என்னை விட்டுடுங்க' என கூறுகிறார். பின்னர், வலி பொறுக்க முடியாமல் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். அப்போது மீண்டும் அந்த மாணவனை அவரை பிடித்து, `யாருன்னு சொல்லுடா’ என்று கேட்டு கொடூரமாகத் தாக்கியதுடன் முட்டிபோடச் சொல்லி மிரட்டுகிறார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு மாணவர், மீண்டும் சுற்றுச்சுவர் அருகே அழைத்துச் செல்கிறார். அங்கு புதிதாக வந்த மாணவரும் ஜூனியர் மாணவரை முட்டிபோட வைத்து கடுமையாகத் தாக்குகிறார். அத்துடன் தலைக்கு மேல் கும்பிட்டு மன்னிப்பும் கேட்கச் சொல்கிறார். அப்போது முதலில் தாக்கிய மாணவர் மீண்டும் அவர் மீது தாக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.
இதனைத் தொடர்ந்து, இருதரப்பினரையும் காவல்துறையினர் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளார்.