மத்திய பா.ஜ.க அரசு வீடுகளில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதே போல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59. டீசல் விலை ரூ.85.98 என்றும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இந்த வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இனிமேலும் விலையேறாமல் தடுத்திடவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும், இதுபோன்ற விலையேற்றத்தை தொடர்ந்து செய்து வரும் மத்திய பா.ஜ.க அரசையும், அதனை கண்டிக்க முன்வராத அ.தி.மு.க அரசையும் கண்டிக்கும் வகையில் 22ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின் படி, இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், பொதுமக்க்ளும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.