கரூர் வாங்கல், தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் உழவன் திருவிழா என்ற பெயரில் விவசாயிகள் மாநாடு நடைபெறுவதாகவும், இதில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொது மக்களை திரட்டி வந்துள்ளனர்.
முதல்வர் வருகைக்கு காலதாமதமானதால், அங்கு வைக்கப்பட்டிருந்த வாழை மரங்களில் பழுத்திருந்த பழங்களை பொதுமக்கள் பறித்து சாப்பிட்டதையும், காலியாய் இருந்து ஆயிரக்கணக்கான நாற்காலிகளையும் ஊடக, நாளிதழ் புகைப்பட கலைஞர்கள் படம் பிடித்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் நின்று கொண்டு, செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது அ.தி.மு.க-வினர் ஆவேசமாக தண்ணீர் பாட்டில்களை வீசியுள்ளனர்.
மேலும், நிகழ்ச்சி நடைபெறும்போது இருக்கையை விட்டு எழுந்து சென்ற பொதுமக்களை ஊடக குழுவினர் வீடியோ எடுக்கும்போது அ.தி.மு.க-வினர் கேமராவை பறித்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.
இதையடுத்து அ.தி.மு.க-வினரின் அராஜகமான செயலால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அமைச்சர்கள் தங்கமணி , எம். ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் செய்திளார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போலிஸாரின் சமாதான ஏற்கமறுத்தனர். மேலும், அ.தி.மு.க-வினர் ஏற்பாடு செய்து அழைத்து வந்த வாகனத்தை புறக்கணித்து, சரக்கு வாகனத்தை பிடித்து சொந்த செலவில் ஊர் திரும்பினர்.