கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரன். இவர் தனியார் வங்கி ஒன்றில், கடன் வாங்கியுள்ளார். ஆனால் அசல் மற்றும் வட்டியைச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கடன் தொகையிலிருந்து ஒரே தவணையாகத் தன்னால் இயன்ற கடனைத் திருப்பிச் செலுத்த, வங்கி தீர்ப்பாயத்தில் முறையிட்டார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ராஜாஜி சாலையில் உள்ள வங்கியின் சொத்து தாவா பிரிவின் சிறப்பு அதிகாரி, ராஜேந்திரன், ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரனிடம், வழக்கைச் சாதகமாக முடிப்பதற்கும், ஒரே நேரத்தில் இயன்ற தொகையைச் செலுத்துவதற்கும் தான் ஏற்பாடு செய்து கொடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார். இதற்கு நீங்கள் ரூ.3 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும் ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரன், இது குறித்து சி.பி.ஐ லஞ்ச தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்துள்ளார். பின்னர், வங்கி அதிகாரியைப் பொறி வைத்துப் பிடிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திட்டம் போட்டனர். அதன்படி ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரனிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூ.3 லட்சத்தை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்து அனுப்பினர்.
பின்னர், ரூபாய் 3 லட்சத்தை வாங்குவதற்காக கோயம்பேட்டில் உள்ள தனியார் கிளப்பிற்கு நேற்று ராஜேந்திரன் வந்திருந்தார். பிறகு ஸ்ரீவந்த் விஷ்வேஷ்வரன் அதிகாரிகள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை ராஜேந்திரனிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி ராஜேந்திரனை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனின் செயல்பாடுகள் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜேந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை இடவும் திட்டமிட்டுள்ளனர்.