வங்கியில் பெற்ற விவசாயக் கடனை திருப்பிச் செலுத்த இயலாததால் வீட்டை சீல் வைத்து, விவசாயியின் குடும்பத்தை தவிக்க விட்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிசங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், கடந்த 2018ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்றில் விவசாயக் கடனாக சுமார் 4.5 லட்சம் பெற்றுள்ளார். கடனாகப் பெற்ற தொகையைக் கொண்டு 7 கறவை மாடுகள் வாங்கியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாததாலும் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் தொழிலை சரிவர செய்யமுடிமால் போனதால் வங்கியில் வாங்கிய கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், வங்கிக்கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு உடன்படாத வங்கி நிர்வாகம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வழக்கறிஞர்கள் உதவியுடன் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக சதீஷ்குமார் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளோடு மாற்று உடையின்றி வீட்டுக்கு வெளியே தவித்து வருகின்றனர். இந்நிகழ்வு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மதுரையைச் சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அவருடைய வீட்டிற்கு காவல்துறை உதவியோடு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்துணி கூட இல்லாமல் 2 மகள்கள், மனைவியுடன் சதீஷின் குடும்பமே ஒரு வாரமாக தெருவோரம் வசிக்கும் கொடுமை வலியை தருகிறது.
கொரோனாவால் விவசாயிகள் பலர் வங்கிக்கடனை செலுத்த முடியாத நிலையில், வங்கிகள் கடுமை காட்டுவதை தடுக்க அடிமை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளை வீட்டை விட்டு துரத்துவது தான் பச்சைத்துண்டு பழனிச்சாமி சொல்லும் வெற்றி நடை போடும் தமிழகமா?” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.