கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்ட சாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சரஸ்வதி மற்றும் மகள் அனுஷ்கா, மகன் விகாஷ் ஆகியோருடன் குடும்பத்துடன் நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபட்டிவிளை பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தச்சு வேலை பார்த்து வந்த கண்ணன் கடந்த இரு தினங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் இவர் வேலை பார்க்கும் கடை ஊழியர் ஒருவர் இன்று அவரது வீட்டிற்கு வந்து கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து கூறியதன் பேரில், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கே மனைவி மற்றும் இரு குழந்தைகள் படுக்கையில் விஷம் அருந்தி இருந்தும், கண்ணன் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இவரது மகன் கடந்த சில தினங்களாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் மன உளைச்சல் தாங்காமல் பூச்சிமருந்தை மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், கண்ணன் மற்றும் சரஸ்வதி எழுதிய கடிதத்தில் “நாங்கள் உங்களை விட்டு செல்கிறோம். எங்களை மன்னித்து விடுங்கள். மற்றும் LIC வங்கியில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளவும், எங்கள் கையில் இருக்கும் பணத்தை சாவு செலவிற்கு எடுத்துக்கொள்ளவும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.