நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி எல்லையில் உள்ளது செம்பக்கொல்லி பழங்குடியின கிராமம்.
போஸ்பெரா பகுதியில் இருந்து முதுமலை வனப்பகுதி எல்லை வழியாக இந்த கிராமத்திற்கு செல்ல மண் சாலை உள்ளது. சாலையை ஒட்டி யானை நுழையாமல் தடுக்க அகழி வெட்டபட்டுள்ளது.
இந்த நிலையில் அகழியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அந்த வழியாக இன்று காலை மதம் பிடித்த காட்டு யானை ஒன்று சாலை பகுதிக்கு வந்துள்ளது. இதனை அறியாமல் செம்பக்கொல்லி கிராமத்தை சேர்ந்த சாந்தா அவரது கணவர் மற்றும் மாதன் என்ற மற்றொரு நபர் கடைக்கு சென்று திரும்பியுள்ளனர்.
அப்போது, சாலையில் வந்த காட்டு யானை அவர்களை துரத்தி தாக்க வந்துள்ளது. சுதாரித்து கொண்ட மூவரும் தப்பியோடி அகழிக்கு மறுபுறம் சென்று உயிர் தப்பியுள்ளனர். இந்த திக் திக் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.