தமிழ்நாடு

ஏழு பேர் விடுதலையில் ‘யாருக்கு அதிகாரம்’ என்று மாற்றி மாற்றி இழுத்தடிக்கும் அரசுகள் - மறுக்கப்படும் நீதி!

மத்திய அரசும் ஆளுநரும் இப்படி ‘யாருக்கு அதிகாரம்’ என்று மாற்றி மாற்றி விளையாடுவது, ஏழுபேரையும் விடுதலை செய்யாமல் இழுத்தடிக்கவே என்று தெளிவாகத் தெரிகிறது.

ஏழு பேர் விடுதலையில் ‘யாருக்கு அதிகாரம்’ என்று மாற்றி மாற்றி இழுத்தடிக்கும் அரசுகள் - மறுக்கப்படும் நீதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசும் ஆளுநரும் இப்படி ‘யாருக்கு அதிகாரம்’ என்று மாற்றி மாற்றி விளையாடுவது, ஏழு பேரையும் விடுதலை செய்யாமல் இழுத்தடிக்கவே என்று தெளிவாகத் தெரிகிறது என ஏழு பேர் விடுதலை தொடர்பாக “மறுக்கப்படும் நீதி” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான முடிவைத் தமிழக ஆளுநரும் மத்திய அரசும் மாற்றி மாற்றிப் பந்தாடுவது, நீதி வழங்கும் முறையையே கேலிக்குரியதாக மாற்றியுள்ளது.

2014-ம் ஆண்டு இவர்களை விடுவிக்கத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ‘இவர்களை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா’ என்ற வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ‘தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு. இதுதொடர்பாக ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று 2018 செப்டம்பரில் இறுதித் தீர்ப்பளித்தது. உடனடியாகத் தமிழக சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இரண்டாண்டுகள் கடந்தும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஏழு பேர் விடுதலையில் ‘யாருக்கு அதிகாரம்’ என்று மாற்றி மாற்றி இழுத்தடிக்கும் அரசுகள் - மறுக்கப்படும் நீதி!

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசின் வாதங்கள் முரணாகவே இருந்தன. ‘விடுதலை விவகாரம் பேரறிவாளனுக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையிலான ஒன்று. இதில் நாங்கள் தலையிடவில்லை’ என சி.பி.ஐ தரப்பு ஒதுங்கிக்கொண்டது. அதன்பின், ‘இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கக் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உண்டு’ என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால், 2021 ஜனவரி 21 அன்று விசாரணையின்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த விவகாரம் குறித்துத் தமிழக ஆளுநர் மூன்று, நான்கு நாள்களில் முடிவெடுப்பார்’ என்றார். ‘ஏழு நாள்களில் முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து, ‘அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்துப் பார்த்தபோது, இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளது’ என மத்திய உள்துறைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

இடைப்பட்ட நாள்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரைச் சந்தித்து இவர்களின் விடுதலைக்காக வலியுறுத்தினார். அப்போதும், தான் எடுத்த முடிவு குறித்து அவரிடம் ஆளுநர் தெரிவிக்கவில்லை. பல்வேறு விவகாரங்கள் குறித்து உடனுக்குடன் செய்தி வெளியிடும் ஆளுநர் மாளிகை, இதைக் கடைசிவரை ரகசியமாகவே வைத்திருந்தது. நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்வரை இது யாருக்கும் தெரியாது.

ஏழு பேர் விடுதலையில் ‘யாருக்கு அதிகாரம்’ என்று மாற்றி மாற்றி இழுத்தடிக்கும் அரசுகள் - மறுக்கப்படும் நீதி!

தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தை இரண்டாண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது மீண்டும் பந்தை மத்திய அரசுக்குத் திருப்புவது எந்தவகையில் நியாயம்? மாநில அமைச்சரவையின் கூட்டுமுடிவை ஆளுநர் உதறித் தள்ளுவது மரபுகளின்படி சரியானதல்ல.

மத்திய அரசும் ஆளுநரும் இப்படி ‘யாருக்கு அதிகாரம்’ என்று மாற்றி மாற்றி விளையாடுவது, ஏழு பேரையும் விடுதலை செய்யாமல் இழுத்தடிக்கவே என்று தெளிவாகத் தெரிகிறது. ‘தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிதான்’ என்னும் வாக்கியத்துக்கு உதாரணங்களாக மத்திய அரசும் ஆளுநரும் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

நன்றி: ஆனந்த விகடன்

banner

Related Stories

Related Stories