மிருகவதை சட்டத்தின் கீழ் IIT நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வளாகத்தில் திரிந்த தெரு நாய்கள் மட்டுமல்லாமல் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்களும் 90 நாட்களாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாய்களை 90 நாட்களாக சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைத்துள்ள IIT நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு தாக்கல் செய்த மனுவில், இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை என்ற பெயரில் IIT வளாகத்தில் உள்ள தெரு நாய்கள், செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்கள் என, 170 நாய்கள் 90 நாட்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய நாய்களை சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைத்த ஐஐடி நிர்வாகத்துக்கு எதிராக மிருகவதைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த டிசம்பரில் இந்திய விலங்குகள் நல வாரிய தலைவருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஐஐடி நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. தெரு நாய்களை மனிதாபிமானத்துடன், அக்கறையுடனும் அணுக வேண்டும் எனவும் இரக்க மனப்பான்மையுடன் நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.