ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணங்கள் குறைப்பு வரவேற்புக்குரியது. அதேபோல, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணங்களை, இதர தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது மிக மிக காலதாமதமான நடவடிக்கை.
2014 ஆம் ஆண்டு முதல், அக்கல்லூரியில் படித்த மாணாக்கர்களும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கமும், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கமும் பெற்றோர்களும் நடத்திய தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. தற்பொழுது பயிலும் மாணவர்கள் நடத்திய வீரமிக்கப் போராட்டங்களும் இந்த அரசாணை வெளிவர காரணமாகியுள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பின் மூலம் ,ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இக்கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்பட்டு, சமூக நீதி நிலை நாட்டப் பட்டுள்ளது. இந்த வெற்றியை பெறும் வரை உறுதியுடன் போராடிய ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை, செலுத்தாவிட்டால் தேர்வை எழுத அனுமதிக்க மாட்டோம் என மிரட்டி, கல்லூரிகளின் நிர்வாகம் ஒரு பிரிவு மாணவர்களிடம் வசூல் செய்துள்ளது. மிரட்டி வசூல் செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாயை உயர்கல்வித்துறை மாணவர்களுக்கு உடனடியாக திருப்பி வழங்கிட வேண்டும்.
மாணவர்களிடையே பாரபட்சப் போக்கை காட்டக் கூடாது. இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் உயர் கல்வித்துறை மாணவர்களிடம் திருப்பி வழங்கிட வேண்டும். கட்டண வசூல் வேட்டையை முடித்த பிறகே, இக்கல்லூரிகளை சுகாதாரத் துறைக்கு மாற்ற பல நிர்பந்தங்களால் உயர் கல்வித் துறை முன்வந்துள்ளது.
எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற நோக்கில் உயர்கல்வித் துறை மனிதநேயமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின், கல்விக் கட்டணக் குறைப்புக் குறித்து தமிழக அரசு அமைதி காப்பது சரியல்ல. அக்கல்லூரியின் கல்விக் கட்டணத்தையும் , தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட , தமிழக அரசு ,அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி் 06/02/2021 அன்று மாலை பெருந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று,சான்றிதழ் பணி நியமனத்திற்காக காத்திருப் போருக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும்.
மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். ஏற்கனவே, தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள், பன்நோக்கு மருத்துமனை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களையும், பணியாளர்களையும் பணி நீக்கம் செய்யக் கூடாது. பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும், ஏற்கனவே கொரோனா தடுப்பிற்காக செலவு செய்யப்பட்ட தொகைகளையும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சேர்த்துள்ளது மத்திய நிதித்துறை. அவற்றை எல்லாம் சேர்த்து இந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு, சென்ற ஆண்டைவிட 137 விழுக்காடு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது போன்ற மாயத் தோற்றம் மத்திய பட்ஜெட்டில் உருவாக்கப் பட்டுள்ளது.
உண்மையில் சென்ற ஆண்டைவிட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.34 விழுக்காட்டையே மத்திய அரசு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. இவை மிகுந்த ஏமாற்றத்தை தருகின்றன.
எனவே, மத்திய அரசு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். கொரோனாவால் இந்தியாவில் 734 மருத்துவர்கள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே 162 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தவறான தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் 89 மருத்துவர்கள் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பலியான அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 50 லட்சமும்,மத்திய அரசு ரூ 50 லட்சமும் கொரோனா பாதிப்பு இறப்பு இழப்பீடாக வழங்கிட வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம், ஏற்கனவே அறிவித்தது போல் வழங்கிட வேண்டும்.இந்த நிவாரணத் தொகையை பயிற்சி மருத்துவர்கள்,பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் வழங்கிட வேண்டும்.” என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.