மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 நாட்களாக தொடர் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர்.
ஆனாலும் தற்போது வரை பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை. மாறாக சொந்த நாட்டு விவசாயிகளையே தீவிரவாதி என முத்திரை குத்தி அவதூறு செய்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி பேரணியை சீர்குலைக்க முயன்றது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அந்த சதியும் அம்பலமானது.
குறிப்பாக, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி போராட்டத்தை சீர்குலைத்தது போன்று, விவசாயிகள் போராட்டத்திலும் சங்பரிவார் கும்பல் விவசாயிகள் மீது கல்லெறிந்து வன்முறையை தூண்டியது. ஆனால், அதிலும் மோடி அரசிற்கு தோல்வியே மிஞ்சியது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தற்போது டெல்லியில் நீர் வாரியத்தின் மூலம் போராடும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்த கழிப்பிடங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. மின்சாரம் இணையதளம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரக்கமற்ற நடவடிக்கையின் மூலம் விவசாயிகளை பணிய வைக்கலாம் என மோடி அரசு நினைக்கிறது. மத்திய அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லியில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகப்புகழ் பெற்ற பாடகி ரிஹானா, குரல் கொடுத்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கொள்காட்டி, நாம் ஏன் இதுகுறித்து பேசுவதில்லை? என்று ரிஹானாகேள்வி எழுப்பியிருந்தார்.
அதே போல், சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்” என்று அவர் குரல் கொடுத்திருக்கிறார்.
அதேப்போல், நடிகை மியா கலிஃபாவும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லியில் எந்த மாதிரியான மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. போராட்டக் களத்தில் இணைய சேவையைத் துண்டித்து விட்டார்களமே’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போல், மற்றொரு ட்விட்டர் பதிவில், “விவசாயிகள் பணத்துக்காக நடிப்பவர்களா? அப்படியென்றால், விருது வழங்கும் விழாக்களில் அவர்களையும் பரிசீலிக்காமல் விட்டுவிடக் கூடாது. நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலக பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாத மோடி அரசு தனக்கு ஆதரவாளர்களாக இருக்கும் சினிமா பிரபலங்களையும், கிரிகெட் ஜாம்பவான் என மக்களால் கொண்டாடப்பட்ட முன்னாள் கிரிகெட் விரர்களையும் வைத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக பேசி வருகின்றனர்.
அந்தவகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல.
இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும், இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமை நிலைக்கட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் IndiaTogether, IndiaStandsAgainstpropaganda என்ற ஹாஷ்டேகில் இந்தியாவிற்கு ஆதரவாகவும் ரிஹானாவின் மற்றும் பிற சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை குரல் கொடுக்காத சச்சின், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டவர்களை நோக்கி எதிர்க்குரல் எழுப்பியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில்தான் இந்திய பிரபலங்களின் அந்த ட்விட்டர் பதிவுக்கு எதிராக நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டாப்ஸி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரே ஒரு ட்விட்டர் பதிவு உங்கள் ஒற்றுமையை குலைக்கும் என்றால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருவது பா.ஜ.க அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.