திமுக தலைவர் அறிவுறுத்தலின்படி, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் , வேளச்சேரியா? வெள்ளச்சேரியா? என்னும் வினாவோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்றது.
வேளச்சேரி காந்தி சாலையில் அதிமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து, அதன் வடிகால்களை சீரமைக்காததால் தொடர்ந்து மழை காலங்களில் வேளச்சேரி வெள்ளச்சேரியாக காட்சி அளிக்கிறது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த வேளச்சேரி ஏரி திட்டத்தை செயல்படுத்தாமல் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தும் அதிமுக அரசு வேளச்சேரியில் எந்தவித மக்கள் நலத்திட்டங்களையும் செய்யவில்லை எனவும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து நெரிசல் என வேளச்சேரியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வரும் திமுக ஆட்சியில் கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
வேளச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா மற்றும் தென்சென்னை மாவட்ட வட்ட மற்றும் பகுதியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பத்தாண்டு காலமாக எந்தவித நலத் திட்டத்தையும் செய்யாத அதிமுக அரசை நிராகரிக்கும் வகையில் மக்களின் எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் அளித்த அலைபேசி எண்ணிற்கு போராட்டத்தில் பங்கேற்றவர்களை மிஸ்டு கால் கொடுக்கும்படி தெரிவித்தார்.
இதில் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் அதிமுக அரசை நிராகரிக்கும் வகையில் தங்களது செல்போன்களில் மிஸ்டுகால் கொடுத்தனர்.