நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உயிரிழந்த காட்டு யானைக்கு, சிகிச்சையின் போது உணவு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்த வன ஊழியர் “இனி யாருக்கு பழம் கொடுப்பேன்! திரும்பிவாடா..” என வேதனையில் கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை கடந்த 10 ஆண்டுகளாக சுற்றித் திரிந்தது. இந்த யானைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்னரும் அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதுடன் சாலைகளில் நிற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த யானையை சில மர்ம நபர்கள் தாக்கியதாகக் தெரிகிறது.
அதில், அந்த யானையின் இடது காது கிழிந்ததுடன், காதின் ஒருபகுதி துண்டாகி கிழே விழுந்துள்ளது. காது கிழிந்ததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடும் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் யானைக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.
இதில் கடந்த ஒருமாதமாக யானைக்கு, சிகிச்சையின் போது உணவு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்த வன ஊழியர் “இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன்! திரும்பிவாடா..” என வேதனையில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யானைக்கு சிகிச்சையின் போது உணவு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்தவர் வன ஊழியர் பெள்ளன். பழங்குடியின மக்களின் பிரதிநிதியான அவர் யானை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியை உதகை வனபகுதியில் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை வன ஊழியர் கோபி, தனது கைகளை அசைத்தும், யானையிடம் பேசியும் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
அதனையடுத்து பெள்ளனின் இந்த மனதை உருக்கும் வீடியோ வைரலாக வலம் வருகிறது. வன ஊழியர் பெள்ளனை, காயமடைந்த ஆண் யானைக்கு உணவு கொடுப்பதற்காகவும், குடியிருப்புப் பகுதியில் நுழையாமல் தடுக்கவும் கண்காணிப்பாளராக நியமித்தது வனத்துறை.
அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக வனத்துறை தரும் மருந்துகளை பழங்களில் வைத்து யானைக்குக் கொடுப்பது பெள்ளனின் வேலை. தினமும் காலை முதல் மாலை வரை, யானையுடனே சுற்றித்திரிந்தார் பெள்ளன். யானையும் பெள்ளனின் அறிவுறுத்தலுக்குக் கட்டுப்பட்டு குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் இருந்து வந்தது.
மேலும் யானையை எஸ்.ஐ என பெள்ளன் அழைத்து வந்தார். இந்நிலையில், சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது யானை உயிரிழந்த தகவல் கேட்டு பெள்ளன் கண்ணீர் விட்டு அழுதார்.
இதனையடுத்து யானையின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்ற அவர், அதன் தும்பிக்கையை பிடித்தபடி கலங்கினார். அப்போது, “நீ சாகத்தான் இரண்டு மாசமா பழமெல்லாம் கொடுத்தேனா? இனி யாருக்கு பழங்கள் கொடுப்பேன்? திரும்பிவாடா..” என கண்ணீர் வடித்து அழுதார். இந்தச் சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
யானை உயிரிழப்பு குறித்த செய்தியைக் கேள்விப்பட்டால் பலரும் வேதனை அடைவார்கள். இன்று இந்த யானையின் உயிரிழப்பை எண்ணி பெள்ளன் அழுதது பலரையும் கண் கலங்கச் வைத்துள்ளது.
யானையின் இறப்பால் பெள்ளன் ஏன் கதறி அழவேண்டும் என்ற கேள்விக்கு பதில், பெள்ளன் காடுகளில் வாழும் வன விலங்குகளை நேசிக்கும் பூர்வகுடிகளில் ஒருவர். பலரும் பூர்வகுடிகள்தான் யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்று எழுதுகின்றனர். அவர்கள் யானைகளுக்கும் பூர்வகுடிகளுக்கும் உள்ள உறவை பற்றி ஒருபோதும் எழுதுவதில்லை.
காடுகளை அழித்து சிலை வைப்பவர்களுக்கும், தோட்டங்களை பாதுகாப்பதாகக் கூறி மின் வேலி அமைப்பவர்களுக்கும், வளர்ச்சிக்காக யானைகளின் வலசைப் பாதைகளை சூறையாடுபவர்களுக்கு எதிரானவர்கள்தான் காடுகளில் வாழும் பூர்வகுடிகள். இவர்கள் ஒருபோதும் பேருயிர் இனத்திற்கு எதிரானவர்கள் அல்ல.
யானைக்காக கதறி அழுத பெள்ளன் தனி நபர் இல்லை.. பூர்வகுடிகளின் ஒட்டுமொத்த முகத்தின் வெளிப்பாடு. இன்னும் பூர்வகுடிகள் யானைகளை பெரியவர், சாமி, காட்டுராசா என்று வாஞ்சையோடு கொஞ்சிக்கொண்டு காடு முழுக்கச் சுற்றி வருகிறார்கள்.
ஆனால் தமிழக அரசோ, மனித - வனவிலங்கு மோதலை அறிவியல் பூர்வமாக அணுகுவதில் தோல்வியடைந்துள்ளது. தமிழக வனத்துறை காடுகளின் தன்மையை பழங்குடிகளின் வாழ்வியலை அறியாத, நகரங்களில் அமர்ந்து குளிரூட்டப்பட்ட அறைகளில் முடிவை எடுக்கும் அதிகாரிகளின் அணுகுமுறைக்கும், பெள்ளன் போன்ற கீழ்நிலை ஊழியருக்கும் பெரும் இடைவெளி உள்ளது என்கிறார் நீலகிரியைச் சேர்ந்த ஆர். பத்ரி.
அதேவேளையில், பெள்ளன் போன்ற பல பூர்வகுடிகளுக்கு வேலை கொடுத்தால் வனவிலங்குகளின் பாதுகாப்பு என்பதை தாண்டி யானை - மனித மோதலையும் கட்டுக்குள் கொண்டு வரலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.