தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 6 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆறு மாத அவகாசம் வழங்கியதை எதிர்த்தும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க கோரியும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த 1983ம் ஆண்டு சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த அம்பாகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், மூன்று ஆண்டுகளை எடுத்துள்ள நிலையில், தற்போதைய ஆணையம் ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க கூறப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, ஆணையம் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்காத நிலையில், இந்த வழக்கு முன் கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஒரு நபர் ஆணையம் அறிக்கை அளித்து, அதை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.