சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏா் இந்தியா அலுவலகத்தில் கமா்சியல் பிரிவில் ஊழியராக பணியாற்றியவா் பசுபதி ராஜன்(57). சென்னை அயனாவரத்தை சோ்ந்த இவருக்கு நேற்று பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பணி நேரம்.
சிக்காகோவிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏா்இந்தியா விமானம் நேற்று இரவு நடைமேடை 25 ல் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வந்த பாா்சல்களை கணக்கெடுக்கும் பணியில் பசுபதி ராஜன் ஈடுப்பட்டிருந்தாா்.
அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கிருந்த சக ஊழியா்கள் அவரை உடனடியாக விமானநிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா். அங்கு பசுபதி ராஜனுக்கு திவீர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் அவா் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தாா். கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் பசுபதி ராஜன் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். ஏா் இந்தியா ஊழியா் ஒருவா் விமானம் அருகே பணியிலிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.