தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் அவரது மகன் அமர் உள்ளிட்டோர் மீது ஆள்கடத்தல், கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்யுமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி கல்லூரி சாலையில் கிரீன்வே டிரேடர்ஸ் என்ற பெயரில் பழனி என்பவர் வெளிநாட்டு பர்னிச்சர் பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ராஜா, அவரது மகன் அமர் ஆகியோர் நடத்தி வரும் பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோபா செட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பணத்தை கேட்டபோது ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ராஜாவும் அவரது மகனும் தராமல் இழுத்தடித்துள்ளனர். மேலும், கடையின் உரிமையாளர் பழனியை கடத்திச் சென்று தேனியில் உள்ள பள்ளியில் வைத்து அடித்து மிரட்டி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பித்து வந்த பழனி, துணை முதலமைச்சரின் சகோதரர் ராஜா மற்றும் அவரது மகன் மீது ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்குடி டி.எஸ்.பி-யிடம் புகார் அளித்தார். மேலும் இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.