இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகையாக 2,500 ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது. நியாயவிலைக் கடை ஊழியர்கள் மூலம் பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கனும், தொகையும் வழங்கப்படுவதாக கூறினாலும், தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினரே பொங்கல் பரிசுத்தொகையை வழங்கி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரிலுள்ள நியாயவிலைக்கடை முன்பாகவே அ.தி.மு.க வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் அ.தி.மு.க பகுதி செயலாளர் கூட்டமாக ரேஷன் கடை ஊழியர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு, பொங்கல் பரிசான 2,500 ரூபாயை ரேஷன் அட்டையாளர்களிடம் நேரடியாக வழங்கினார். பெரும்பாலும் ஆண்களை அழைத்தே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பேசியபோது, பொங்கல் பரிசுத் தொகை முழுவதும், டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு கஜானாவிற்கே வந்து சேரும் என்று கூறியிருந்தார்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகையை ஆண்களிடம் கொடுப்பதால், அவர்கள் அந்தப் பணத்தைப் பெற்று டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று குடித்து விடுவதால் வீடுகளுக்கு அந்த பரிசுத்தொகை வருவதில்லை என தாய்மார்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.