தமிழ்நாடு

“விவசாயத்தில் பெரும் நஷ்டம்... காப்பீட்டு தொகை வெறும் ரூ.500?” - மனமுடைந்து தூத்துக்குடி விவசாயி தற்கொலை!

ஏக்கருக்கு 500 ரூபாய் மட்டுமே பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டதால் மனமுடைந்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“விவசாயத்தில் பெரும் நஷ்டம்... காப்பீட்டு தொகை வெறும் ரூ.500?” - மனமுடைந்து தூத்துக்குடி விவசாயி தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதாலும் ஏக்கருக்கு 500 ரூபாய் மட்டுமே பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்கியதாலும் மனமுடைந்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் விவசாயி ஒருவர் விவசாயத்தில் கடும் நஷ்டமடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (58) இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அபிராமி என்ற மகள் உள்ளார். நாராயணசாமி பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உளுந்து, மக்காச் சோளம் பயிர் செய்திருந்தார்.

இந்நிலையில் உளுந்து பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் மக்காச்சோள பயிரில் படைப் புழு தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை வெறும் 500 ரூபாய் மட்டுமே வங்கி கணக்கில் வரவு ஆகி இருந்ததால் கடந்த இரண்டு நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாராயணசாமி இன்று காலை அவரது விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் ‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். போலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் உறவினர்
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் உறவினர்

விவசாயத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டதாலும் ஏக்கருக்கு 500 ரூபாய் மட்டுமே பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்கியதாலும் மன வேதனை அடைந்து நாராயணசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories