கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் கோரத் தாண்டவமாடியது.
இந்தோனேசியா, இந்தியா மட்டுமல்லாது மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோரப் பகுதிகளையும் தாக்கி, அங்கிருந்த மக்களை வாரிச் சுருட்டியது சுனாமி. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
சுனாமியால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியது.
இன்று சுனாமியின் 16ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் சொந்தங்களை சுனாமியால் இழந்த மக்கள், கடற்கரைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுனாமி தினத்தை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 ஆம் ஆண்டு! 2004 டிசம்பர் 26 #Tsunami-ல் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்! உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.