திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாக்கம் கிராம பஞ்சாயத்தின் தலைவராக பட்டியல் இனத்தை சேர்ந்த அமிர்தம் என்ற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்றது முதல் கிராம பஞ்சாயத்து செயலாளர் சசிக்குமார் உரிய மரியாதை கொடுக்காத நிலையில், ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்காமல் இருந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன.
துணைத்தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ஹரிதாஸ் ஆகியோரின் தொடர் மிரட்டலுக்கும் அமிர்தம் ஆளாகியுள்ளார். இதன் வெளிப்பாடாக சுதந்திர தின கொடியேற்று விழாவிற்கு அமிர்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் தலையீட்டால் கொடியேற்றவிடாமல் தடுக்கப்பட்டார்.
இதுதவிர பஞ்சாயத்து தலைவர் நாற்காலியில் அமர்வதை தடுப்பது, அவரின் சாதிப்பெயரை குறிப்பிட்டு அழைப்பது, பஞ்சாயத்தின் செலவு ஆவணங்களை தராமல் மறைப்பது, துணைத்தலைவரின் கணவர் மூலம் ஆவணங்களை கையாளப்படுவது போன்ற பல முறைகேடுகளை அமிர்தம் தட்டிக்கேட்டுள்ளார்.
தன் மீதான கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் அமிர்தம் அளித்த புகாரில் ஹரிதாஸ், விஜயகுமார், சசிக்குமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றனர். இந்நிலையில் தனக்கு மீண்டும் மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு வழங்க கோரி அமிர்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், 1997 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த பல பஞ்சாயத்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ரவீந்திரன், இரண்டு வாரங்களில் விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.