செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் ரங்கநாதன் (27). இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வந்தார்.
இவர் தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக கெட் ரூபி டாட் காம் என்கின்ற ஆன்லைன் வர்த்தகம் மூலம் 4000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது.
கடன் கொடுத்த அந்த நிறுவனம் கஸ்டமர் கேர் மூலம் இவரை தொடர்பு கொண்டு நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்களை பற்றி அவதூறாக உங்கள் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் அவமானம் படுத்திவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து இன்று அந்த ஆன்லைன் நிறுவனம் குறுஞ்செய்தியை இவருடைய நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறது. இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் விவேக்கிற்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்த விவேக் பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யுமளவுக்கு பேசிய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் படாளம் காவல் நிலையம் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.