மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.
அதேவேளையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் முரண்டு பிடித்து வருகிறது. தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத மத்திய மோடி அரசை அதன் கூட்டணி கட்சிகளே கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களுக்கு எதிர்த்து தெரிவித்து சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதுமட்டுமல்லாது, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி எம்.எல்.ஏக்கள் தற்போது போர்கொடித் தூக்கியுள்ளனர்.
குறிப்பாக, ஹரியாணாவில், பா.ஜ.க கூட்டணி கட்சியான சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி, விவசாயிகளின் வாக்குவங்கியை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. ஆகையால், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு கிட்டாவிட்டால் கூட்டணியை முறிக்கவும் தயார்நிலையில் உள்ளதாக கூறியுள்ளது.
இதனையடுத்து , நேற்றைய தினம் கூட ஹரியாணா முதல்வர் துஷ்யந்த் சவுதாலா மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மறுக்கப்பட்டால் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவேன் என ஹரியாணா முதல்வர் துஷ்யந்த் சவுதாலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி) விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவோம் என அக்கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தை ஆதரவு தெரிவித்து சென்ற ஆர்எல்பி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் அங்குள்ள மக்களிடம் பேசுகையில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. எனவே பிரதமர் மோடி விவசாயிகள் மீது உண்மையில் அக்கறை கொள்பவராக இருந்தால், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாது, கூடிய விரையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஆர்எல்பி கட்சி வெளியேறும்” எனத் தெரிவித்தார்.
பா.ஜ.க அரசுக்கு எதிராக அதன் கூட்டணிகள் எழுந்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதைத் தவிர மத்திய மோடி அரசுக்கு வேறுவழியில்லை என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.