டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20% தமிழ் வழி இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு 8 மாதமாக கிடப்பில் இருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் தி.மு.க தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து தற்போது மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியின்போது, தமிழ்வழியில் பயின்றோருக்குத் தமிழக அரசுப் பணியில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான தமிழ்வழி பயின்ற மாணவர்கள் பயனடைந்தார்கள்.
இந்நிலையில், பட்டப்படிப்பு படித்தவர்கள் நிச்சயம் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளிலும், 10-ஆம் வகுப்புப் படித்தவர்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே - அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடந்த 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலந்தாழ்த்தி வந்தார்.
இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றம் ஒப்புதல் அளித்த சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெறாமல் - ஆளுநருக்கு உரிய அழுத்தம் தராமல், “அரசியல் விளம்பரத்திற்காக” ஒவ்வொரு ஊராகச் சுற்றி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
முதலமைச்சரே நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தி இந்தச் சட்டத்திருத்தத்திற்கான ஒப்புதலை எவ்விதத் தாமதமும் இன்றிப் பெற வேண்டும்; தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி - அதற்காகத் தி.மு.க ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம்” என அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில்தான், இன்று டி.என்.பி.எஸ்.சி தேர்வுப் பணிகளில் 20% தமிழ் வழி இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுங்கட்சியை செயல்பட வைக்கும் கட்சி தி.மு.க என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்வழியில் படித்தோருக்குத் தமிழக அரசுப்பணிகளில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எட்டு மாதமாக அனுமதி வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் கேள்வி எழுப்பினேன். தற்போது, ஆளுநர் அனுமதி வழங்கியதாகச் செய்தி கிடைத்துள்ளது. ஆளுநருக்கு நன்றி!
அதேநேரம், சட்டம் போட்டு அனுப்பிவிட்டு எட்டு மாதமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழக அரசின் மந்தநிலைப் போக்குக் கண்டனம்!” எனத் தெரிவித்துள்ளார்.