2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக “விடியலைத் தேடி ஸ்டாலின் குரல்” என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை, தி.மு.க தேர்தல் பிரச்சார குழு இணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் தூத்துக்குடியில் உள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், “தமிழகத்தின் எதிர்காலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான். மத்திய அரசின் அடிமையாக உள்ள ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்றி நல்லாட்சி அமைய இந்த தேர்தல் பயணம் உறுதுணையாக இருக்கும்.
யார் கட்சி ஆரம்பித்தாலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவின் ஆட்சி அமைவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த மழை காலத்தில் கூட எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இந்த அ.தி.மு.க அரசு எடுக்காத காரணத்தால் தான், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உரிய நடவடிக்கைகளை அ.தி.மு.க அரசு எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்டாளன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் நினைவு மண்டபத்திற்குச் சென்ற ராஜ கண்ணப்பன், அழகு முத்துகோனின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். தொடர்ந்து கயத்தார் பகுதிக்கு சென்ற ராஜகண்ணப்பன், அங்கு உள்ள தேனீர் கடையில் பொதுமக்களுடன் இணைந்து தேனீர் அருந்தினார்.
தொடர்ந்து கயத்தார் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜகண்ணப்பன், மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசியபோது, “தமிழகத்தில் சுயமரியாதை காக்கப்பட வேண்டும் என்றால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய எடப்பாடி பழனிசாமி அரசு, அனைத்திலும் ஊழல் செய்து வருகிறது. மேலும் பா.ஜ.க அரசுக்கு அடிமை அரசாகவே அ.தி.மு.க அரசு செயல்பட்டுகிறது. இதனால் எந்தவிதமான திட்டப் பணிகளும் நடைபெறாத, ஒரு நிலைதான் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
இதிலிருந்து தமிழகத்தை மீட்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; அது விரைவில் நிறைவேறும்” என தெரிவித்தார். இந்த பிரச்சார பயணத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொருளாளர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க-வினர் கலந்து கொண்டனர்.