டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வின் மூலம் வழங்கப்படும் பணியில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டை, நேரடியாக கல்லூரிக்குச் சென்று தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கக்கோரி, திருமங்கலத்தை சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் வழியில் படித்தோருக்கான டி.என்.பி.எஸ்.சி 20% இட ஒதுக்கீடு திருத்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாதங்களாக காத்திருப்பில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, தமிழக ஆளுநரின் தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதனையடுத்து 20% தமிழ் வழி இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா குறித்து பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். தமிழ் வழி ஒதுக்கீட்டில் 2016 முதல் 2019 வரை தேர்வான 85 பேரின் கல்விச் சான்றிதழ்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு வழங்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.