தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, நேற்று மாலை திருவாரூர் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
முதலாவதாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள, இடையூர் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளை சந்தித்து உரையாடிய அவர், வயலில் இறங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர், மறைந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் வீட்டிற்கு சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், திருத்துறைப்பூண்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எல்லோரும் நம்முடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு, புதிதாக தி.மு.க-வில் இனைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு அவர்களுடன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்ற தேர்தலில் மக்களை சந்திக்க தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள், மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். மக்கள் ஆதரவு தி.மு.க-விற்கு தான் என மக்கள் உறுதி அளித்துள்ளனர்.
ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பித்து 72 நாளில் 23 லட்சம் பேர் தி.மு.கவில் உறுப்பினர் ஆகி உள்ளனர். இதில், பெரும்பாலோனோர் இளைஞர்கள்தான். ஆளும் அரசு மீது மக்கள் மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர். மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்தை அடிமையாக தான் பார்கிறது.
அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் மிகப்பெரிய அளவில் பேரம் பேசப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளாக கொள்ளை அடித்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து செந்தலைப்பட்டினத்தில் நடந்த மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் மட்டும் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். என்னை தினசரி கைது செய்து, உத்வேகத்தை கொடுத்தது இந்த அடிமை அ.தி.மு.க ஆட்சிதான்.
மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எப்போதும் துணைநிற்பது தி.மு.க தான். மீனவர்களுக்கு தீங்குவிளைவிக்கும் சாகர்மாலா திட்டத்தை தி.மு.க தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அவர் துறையை சரியாக கவனிக்காததால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க எதை சொன்னாலும் அதற்கு அடிமையாக உள்ள அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் அனைவரும் தி.மு.க-விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் தி.மு.க ஆட்சி அமைய உள்ளது. உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது” எனத் தெரிவித்தார்.