கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 25ம் தேதி சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு கொரோனா தொற்றுப்பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு, அரசு அறிவிப்பின் படி, சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டள்ளார்.
சென்னைக்கு வந்த சுந்தரவேல், தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கூட குடும்பத்தினர் யாருக்கும் தொடர்புகொள்ளாததால், சந்தேகமடைந்த அவரது மனைவி சந்திரா, ஜூன் 29ம் தேதி விடுதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் வெளியே சென்றுள்ளதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“தனிமைப்படுத்தப்பட்ட நபர் எப்படி வெளியே செல்ல முடியும்?” என சந்திரா கேள்வி எழுப்பவே, எதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டித்துள்ளனர் விடுதி நிர்வாகம். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து சுந்தரவேல், இறந்துவிட்டதாக கூறி அவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரா, தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளிட்டார். மரணமடைந்த சுந்தரவேலின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலிஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை என கூறப்பட்டுகிறது.
இதனிடையே உயிரிழந்த சுந்தரவேலின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தி.மு.கவினர் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக ஜூலை 1ம் தேதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “‘ஹோட்டல்ல தனிமைப்படுத்தின என் வீட்டுக்காரரை அழுகிய நிலையில் போஸ்ட்மார்டம் பண்ணி பிணமா கொடுத்துட்டாங்க சார்’ - கதறி அழும் சந்திராவை தேற்ற வார்த்தைகள் இல்லை.
சிங்கப்பூரிலிருந்து வந்த இவரின் கணவருக்கு கொரோனா கிடையாது. சென்னை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர் குளியலறையில் இறந்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டவரைக் கண்காணிக்க முடியவில்லை என்றால் எதற்குத் தனிமைப்படுத்த வேண்டும்? வெறும் கணக்குக் காட்டுவதற்கா? எளியவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடாது. சந்திராவுக்கான உதவிகளை கழகம் முன்னின்று செய்யும். #கதறும்குடும்பங்கள்_கோட்டைவிட்டEPS” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 4 மாதங்கள் ஆன நிலையில், ஆளும் அ.தி.மு.க அரசு எந்தவித உதவியும் செய்யாத நிலையில், கணவரின் மரணத்திற்கு நீதிவேண்டி அவரது மனைவி சந்திரா, நேற்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தார். அவரின் கணவர் மரணத்திற்கு நியாயம் கிடைக்க தி.மு.க துணை நிற்கும் என வாக்குறுதி அளித்தார்.
இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா ஊரடங்கின் போது சிங்கப்பூரிலிருந்து வந்த சந்திராவின் கணவர் சென்னை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இறந்தார்.
அத்தகவலை கூட அடிமை அரசு சந்திராவுக்கு சொல்லவில்லை-கழகத்தினர் உதவியால் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 3 வயது குழந்தையுடன் தவிக்கும் சந்திரா அப்போதே அரசிடம் உதவி கோரினார். நானும் அதை அப்போது வலியுறுத்தினேன்.
தஞ்சை - தென்னமநாட்டில் நேற்று நான் விவசாயிகளை சந்தித்த போது மனுவோடு வந்த சந்திரா, ‘அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் வரவில்லை’ என விரக்தியோடு சொன்னார். இது தான் உங்கள் ஆட்சியின் லட்சணம் எடப்பாடி பழனிசாமி அவர்களே.
போஸ்டர் நாடகங்களை தவிர்த்து பாதிக்கப்படும் எளிய மக்களுக்கு இனியாவது உண்மையாக உதவுங்கள். சகோதரி சந்திராவின் கண்ணீரை துடைக்க முன்வாருங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.