தமிழ்நாடு

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை கோரிக்கை வைத்துள்ளன.

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மதித்து, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இதுதொடர்பாக தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், “புராரி மைதானத்திற்குப் போனால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்”என்று நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார - மேலாதிக்க மனப்பான்மை கொண்ட மத்திய பா.ஜ.க அரசுக்கு, நாங்கள் அனைவரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

“குறைந்தபட்ச ஆதார விலை”என்ற சொற்றொடரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக, விவாதமே இன்றி, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கி, அவர்தம் எதிர்காலத்தை இருளடையச் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.

இவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, வேளாண்மையின் உயிர் நாடியாக இருக்கும் இலவச மின்சாரத்தையும் பறிக்க வஞ்சகமாகத் திட்டமிடப் படுகிறது.

“குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை”; “விவசாய மண்டிகள் இல்லை”; “இலவச மின்சாரம் இல்லை”என்று அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து, விவசாயப் பெருமக்களின் கண்ணிரண்டையும் பிடுங்கிக் கொண்டுவிட்டது மத்திய அரசு. ஆனால் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல், “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது”என்று நேற்றைய தினம் “மன் கி பாத்”உரையில் பேசியிருப்பது, விவசாயிகள் தமது வாழ்வுயிரையும் உரிமையையும் காக்க நடத்தி வரும் போராட்டத்தை அவமதிப்பதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது.

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள் டெல்லிக்குச் செல்லும் பல்வேறு வழிகளில் அணிவகுத்துப் போராடி வருகிறார்கள். “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுக”; “குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்”; “மின்சாரத் திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும்”; உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் விவசாயிகளை சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண, பிரதமர் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அதற்குப் பதில், “பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை”; “ போராடும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு”; “போலீஸ் தடியடி”; “டெல்லிக்கு வரும் விவசாயிகளை, ஜந்தர் மந்தரில் இடம் தருகிறோம் என்று பொய் சொல்லி, வேறு மைதானத்திற்குக் கொண்டு போய் அடைப்பது”; என்று ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் அக்கறையின்றி, அராஜக நடைமுறைகளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, விவசாயிகளை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்று பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கருதி, கச்சை கட்டிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த விவசாய விரோத சட்டத்தை, நாடாளுமன்றத்திலேயே அ.தி.மு.க. ஆதரித்து குரல் கொடுத்தது, அ.தி.மு.க. விவசாயிகளுக்கு செய்த துரோகம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதுபோலவே, தமிழக சட்டமன்றத்திலும், அதற்கு நிகரான ஒரு சட்டத்தை அ.தி.மு.க., கொண்டு வந்துவிட்டது. விவசாயிகள் விரோத செயல்களில் பா.ஜ.க. - அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

ஐதராபாத் மாநகராட்சியைக் கைப்பற்ற ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியின் அளவுகூட, அறுபத்து இரண்டு கோடி விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் காட்டிட மறுப்பது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கவலை அளித்திடும் நிகழ்வாகும்.

விவசாயிகள் நடத்திவரும் போராட்டம், வாழ்வுரிமைப் போராட்டம்! அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை! “குறைந்தபட்ச ஆதாரவிலை”என்பது வேளாண்மையின் முதுகெலும்பு; வேளாண் வளர்ச்சிக்கான வித்து. அதை நசுக்கி முறித்திடும் வகையிலேதான், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அரசியல் கட்சிகள் சொன்ன போது, பிரதமர் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவான விவாதமும் நடக்கவில்லை; ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் ஏற்கப்படவில்லை.

நாடாளுமன்ற நடைமுறைகளை உடைத்து நொறுக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பைத் தகர்த்து, கார்ப்பரேட் கம்பெனிகளைக் களிப்புறச் செய்து வாழ வைக்கவும், மேலும் மேலும் கொழுத்துப் பெருக்கவும், மத்திய பா.ஜ.க. அரசு கடைப்பிடித்த தந்திரோபாயத்தை இப்போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனால்தான் கொதித்தெழுந்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

ஆகவே, ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்; விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து, அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கேயே சென்று, இந்த நாட்டின் உயிரைக் காப்பாற்றும் உழைக்கும் வர்க்கமான விவசாயப் பெருமக்களிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அந்த மைதானத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும்; வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

உணவுப் பாதுகாப்பின் கேந்திர மையமாகத் திகழும் வேளாண்மையையும், அதன் உயிரோட்டமாகத் திகழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் காப்பாற்றிட, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மனமார முன்வர வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories