நிவர் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதியாக பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் முட்டுக்காடு முகத்துவாரத்தை பார்வையிட உள்ளார்.
இந்நிலையில் முதல்வரின் வருகையையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க-வினர் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், ஆடம்பர விளம்பரங்களுடன் காத்திருக்கின்றனர். மேலும் ஆய்வுக்கு வரும் முதல்வரை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில் அ.தி.மு.க கொடிக் கம்பங்களை நட்டு வைத்தனர்.
ஏற்கனவே அ.தி.மு.க பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டும், தனது விளம்பர வெறியை நிறுத்திக்கொள்ளாமல் மக்களை அச்சுறுத்தும் விதமாக அ.தி.மு.கவினர் தொடர்ந்து கொடிக்கம்பம் நடுவது, பெரிய அளவிலான பேனர்கள் வைப்பது என செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், முதல்வரை வரவேற்க அ.தி.மு.க கொடியை சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் நடும் பணியில் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கூலித்தொழிலாளியான தியாகராஜன் என்பவர் ஈடுபடுப்படுள்ளார்.
அப்போது சாலையின் மீது மேலே சென்ற மின்சாரம் கம்பி, அ.தி.மு.க கொடிக் கம்பத்தில் உரசியதில், பணியில் ஈடுபட்ட தியாகராஜன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் உடலை கைபற்றிய போலிஸார் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.