காஞ்சிபுரத்தில் சுமார் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நிவர் புயல் கனமழையினால் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்ததால், ஏக்கர் ஒன்றிற்கு ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கிட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிவர் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கத் தொடங்கியது. அதேபோல் அதிக அளவு மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
காஞ்சிபுரம் அடுத்த உள்ள வேளியூர், கோவிந்தவாடி அகரம் , புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் முழுகி சேதமடைந்தன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிர்கள் நன்றாக வளர்ந்து இருந்ததாகவும் லாபம் அதிகம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த திடீர் நிவர் புயல், கன மழையால் அனைத்தும் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் செய்வதறியாமல் வேதனையில் உள்ளனர். மேலும் சில இடங்களில் பயிர் வைத்த இடம் தெரியாமல் முழுவதுமாக நீரில் மூழ்கி அனைத்தும் வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நேரு கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் தற்போது 2,500 ஏக்கர் அளவில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 1,200 ஏக்கர் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிவர் புயல் கனமழையினால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.25ஆயிரம் நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் எனவும், நிவர் புயல் காரணமாக சேதமடைந்த காய்கறிகள், கரும்பு போன்றவற்றிற்கும் பாதிப்புக்கு ஏற்றார்போல் நிவாரண நிதி வழங்கவேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பயிர் காப்பீடு திட்டத்தின் தவணை தொகையினை இம்மாதம் 30ம் தேதி வரையில் செலுத்த அவகாசம் இருந்த நிலையில் தற்போது இம்மாதம் 25ம் தேதியே கடைசி தேதியாக அறிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் காப்பீடு தொகை செலுத்த அடுத்த மாதம் வரை அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.