தமிழ்நாடு

படகுகளில் மீட்கப்படும் மக்கள்... 2015 சென்னை பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் வேளச்சேரியின் அவலநிலை!

நிவர் புயல் தாக்கத்தால் கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வேளச்சேரி பகுதி மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர்.

படகுகளில் மீட்கப்படும் மக்கள்... 2015 சென்னை பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் வேளச்சேரியின் அவலநிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், வேளச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அவ்வகையில் வேளச்சேரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதுடன், இன்று நண்பகலுக்குப் பிறகு காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் தங்கள் வீடுகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாமல், இப்பகுதி மக்கள் அருகிலுள்ள மேம்பாலத்தின் இருபுறத்திலும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

விட்டு விட்டு மழை பெய்வதாலும், தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருப்பதாலும் வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள ஆற்றிலும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதே நிலை நீடித்தால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதால் புயல் கரையை கடப்பதற்குள் என்ன ஆகுமோ என மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். மேலும் ஆங்காங்கே பலத்த காற்று வீசுவதால் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

மழை வெள்ளம், மின் இணைப்பு துண்டிப்பு, பலத்த காற்று என அனைத்தும் ஒரு சேர சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருவதால், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இந்த நிவர் புயல் நினைவுப்படுத்துகிறது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories